ஷவ்வால் நோன்பு

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 27

ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகிறோம்.

இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள் நோற்பது நபி பெருமானார் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையாகும். எனினும் இந்த ஷவ்வால் நோன்பைக் கடமையான நோன்பு என்று கருதக் கூடாது.
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்

"எவர் ஒருவர் ரமளான் மாதத்தின் நோன்பையும் நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடம் முழுவதும் நோன்பு நோற்றதற்குச் சமம்".(ஆதாரம்: முஸ்லிம்)

ஷவ்வால் மாத ஆறு நோன்பைப் பற்றி அறியாமல், அதனையும் நோற்று ஆண்டு முழுவதும் நோன்பு நோற்ற நன்மையைப் பெறுவதில் கவனம் செலுத்தத் தவறி விடுகின்றோம்.

இன்னும் சிலர் அறியாமையால் இது பெண்களுக்கு மட்டும் உரியது அவர்கள் விடுபட்ட நோன்பை நிறைவேற்றுகின்றனர் என்று கருதுகின்றனர். மேற்கண்ட ஹதீஸ் பொதுவாக முஸ்லிம்கள் அனைவருக்கும் உரியது என்பதையும் நாம் கவனத்தில் கொண்டு இந்த ரமளான் முதல் இந்த நோன்பையும் நோற்று அதிக நன்மைகளைப் பெற்றுக் கொள்வோமாக.

ரமளான் முழுவதும் நோன்பு இருந்து தொழுகையை நிறைவேற்றி அதிகமதிகம் குர்ஆனை ஓதி நன்மைகள் பல செய்து ரமளான் முடிந்த மறுநாள் பெருநாள் தொழுகை தொழுதவுடன் சினிமா தியேட்டர்களிலும் இன்னும் பிற கேளிக்கையான காரியங்களிலும் நம்மை மூழ்கச் செய்யும் ஷைத்தானின் வலையில் இருந்தும் நம்மை தற்காத்துக் கொள்வோமாக.

நாம் செய்யும் ஒவ்வொரு அமலுக்கும் 10 நன்மைகள் எனும் அடிப்படையில் நமது முப்பது நோன்புகளுக்கு 300 நோன்புகளின் நன்மை என்பதுடன் தொடர்ந்து இந்த ஆறு நோன்புகளுக்கு 6௯x10 = 60 நோன்புகள் ஆக 300 + 60 = 360 நோன்புகள் என்று ஆண்டு முழுவதும் நோன்பு நோற்ற நன்மை நமக்கு இதில் இருக்கிறது என்பதை ஹதீஸ்களில் இருந்து அறிய முடிகிறது.

மேலும் இப்படி ஒவ்வொரு ஆண்டும் நாம் இதை நோற்று வந்தால் நாம் காலம் முழுவதும் நோன்பு நோற்றதைப் போல் ஆகும் என்றும் நபி மொழிகள் உள்ளன. நன்மை எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதை ஆர்வத்துடன் தேடி முறையாக செயல் படுத்துவதே மறுமையை நம்பக்கூடிய முஃமீன்களின் அழகிய பண்புகளாக இருந்தது என்பதற்கு உத்தம ஸஹாபா பெருமக்கள் (நபித்தோழர்கள்) சரித்திரங்கள் சான்று பகன்று வருகின்றன.

இன்று நமக்கு இந்த நன்மைகளின் மகிமை தெரியாது. ஆனால் நாளை நமது நன்மைகளும் தீமைகளும் நிறுக்கப்படும் போது நமது ஒவ்வொரு சிறிய நன்மையின் மகிமையும் அதேபோல் இன்று சர்வ சாதாரணமாக அலட்சியமாக நாம் செய்து வரும் (பட்டியல்களில் அடங்காத) ஒவ்வொரு தீமையின் பெரும் பாதிப்பும் அதன் பயங்கர இழப்பையும் காண முடியும் என்பது உறுதி.

நம்முடைய கடந்த நாட்களில் எதையும் நம்மால் மாற்ற முடியாது, ஆனால் நம்முடைய இன்றைய நாளை நம்மால் முயன்று சீராக்கிக் கொள்ள முடியும் அதே நிலையில் முயன்று உறுதியாக சீராக நம்முடைய நாளைய வாழ்க்கையையும் அதன் வழிமுறைகளையும் இறை நாட்டத்துடன் அமைத்துக் கொள்ள முடியும் என்பதையும் அதே நிலையில் இறுதி மூச்சு வரை இருக்க வாய்ப்பும் உள்ளது என்பதை மறுக்க முடியாது.

இதற்கும் இஸ்லாமிய வரலாற்றினை தமது உன்னதமான தியாகங்களின் மூலம் சிறப்பித்துச் சென்ற சிற்பிகளான பிலால் (ரலி),கப்பாப் (ரலி), யாசிர் (ரலி), அம்மார் (ரலி), சுமைய்யா (ரலி) போன்ற எண்ணற்ற தியாகச் செம்மல்களின் கடந்தகால மற்றும் இறுதிகால வாழ்க்கையில் மிகவும் தெளிவான அழகான படிப்பினைகள் உள்ளன.

இவற்றையும் நிலையற்ற இந்த உலக வாழ்க்கையில் எப்போது நாம் இவ்வுலகில் அமல்கள் செய்யும் நல் வாய்ப்புகளை இழந்தவர்களாக இவ்வுலகை விட்டுப் பிரிந்து விடுவோமோ தெரியாது என்பதால், வெறும் நன்மைகள் மட்டுமே பயனளித்து நம்மைக் காக்கும் அந்த நிலையான மறு உலக வாழ்க்கைக்குத் தேவையானவற்றை அதிகப்படுத்த முனைவது மிகவும் அவசியம் மட்டுமல்லாது அறிவுடைய செயலாகவும் இருக்கும்.

ஷவ்வால் மாத நோன்பினைப் பற்றி அறிந்து அதையும் கடைப்பிடிக்கக் கூடியவர்கள் மிகவும் குறைவு என்பதே தற்போதைய நிலையாக உள்ளது. ரமளான் முழுவதும் பேணுதலுடன் இருந்த முஸ்லிம்களில் பலர் ஷவ்வால் ஒன்றில் பெருநாளைக் கொண்டாடுவதற்கு என்று பொதுவாக பெருநாளுக்கு முந்தைய மாலை முதல் நள்ளிரவு வரை கடைத்தெருக்களில் நேரத்தைக் கழித்து விட்டு பெருநாள் அன்று பஜ்ர் தொழுகையும் தவறும் நிலையில் தூங்கத் துவங்கிவிடுகின்றனர். இது பெருநாள் கழித்து வரக்கூடிய மற்ற நாட்களிலும் தொடர்கிறது. அடுத்த ரமளான் வரை பலருக்கு இந்த நிலை நீடிக்கிறது என்பது வேதனையான உண்மை.

ரமளானில் தொழுகைக்கு அழைப்பு விடுத்த பாங்கோசைகள் இன்று ஏன் காதுகளில் விழாதது போல் செயல் படுகின்றோம்? அதானுக்கு முன்னர் பள்ளியில் கூடிய நாம் இன்று ஏன் அதை மறக்கடிக்கச் செய்யும் ஷைத்தானுடன் கூடும் விதமாக செயல் படுகின்றோம்? சுவனம் தான் இலட்சியமென்றால் ஏன் இந்த அலட்சியம்? இது தான் நம் மூலதனமா? இதுதான் நமது தக்வாவின் வெளிப்பாடா?

அல்லாஹ் நம்மை இது போன்ற நிலையில் இருந்து பாதுகாப்பானாக! எங்கு இருந்தாலும் எந்நிலையில் இருந்தாலும் நாம் நமது ஈமான், தொழுகை, தக்வா போன்றவற்றினை விட்டுக் கொடுக்காமல் செயல் பட வேண்டும். இவற்றினை இலகுவாக்கும் அடிப்படையே தொழுகை என்பதில் சந்தேகம் ஏதும் உண்டா? ஒவ்வொரு தொழுகையையும் தவறாமல் இயன்ற வறை ஜமாத்துடன் தொழ முயல வேண்டும், வீடுகளிலும் நாம் சுன்னத்தான நபிலான தொழுகைகளை நிறைவேற்ற வேண்டும்.

ரமளான் முழுக்க ஓதிய குர்ஆனை ஷவ்வாலிலும் (பொருளுடன்) ஓதவேண்டும். ஷவ்வாலுக்குப் பின்னரும் தினமும் ஓத வேண்டும், ஷவ்வாலில் மீண்டும் பள்ளிகள் தொழுகையாளிகள் இன்றி காணப்படும் நிலையை நாம் தான் மாற்ற வேண்டும். நாம் ஒவ்வொருவரும் இதனை உணர்ந்து செயல்பட்டால் நமக்கும் நம் முஸ்லிம் சமுதாயத்திற்கும் முழுமையாக பயனளிக்கும்.

ஒருவரிடம் தக்வா நிலைபெற்றிருப்பதன் வெளிப்பாடு அவருக்கும் அவருடைய சமுதாயத்திற்கும் பலனுடையதாக நலன் விளைவிப்பதாக இருக்க வேண்டும், இல்லையென்றால் இறைநம்பிக்கையாளருக்கும் இறைநம்பிக்கையற்றவருக்கும், என்ன வேறுபாடு? அதேபோல இறைநம்பிக்கையுள்ள சமுதாயத்திற்கும் இறைநம்பிக்கையற்ற சமுதாயத்திற்கும் ஒரு வேறுபாடும் இல்லை என்ற நிலை தான் ஏற்படும்.

இதர மதத்தினர்களின் சில பெருநாள்கள் போல் அன்று மட்டும் சிறப்பித்துக் கொண்டாடி,சில நேரங்களில் அதன் திளைப்பில் தனக்கும் தன் சமுதாயத்திற்கும் உடல் ரீதியாக, பொருள் ரீதியாக, ஒழுக்க ரீதியாக, சமூக ஒற்றுமைக்கும் பாதிப்பையும் இழப்பையும் குரோதத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் விதமான ஒரு சிலர்களின் செயலுக்கும் பெருநாள் எனும் பெயரில் மதிமயங்கி செயல்படுவதிலிருந்தும் முஸ்லிம்களின் பெருநாளும் செயல்பாடும் எந்நேரமும் வித்தியாசமானதாக இருக்க வேண்டும்.

இதில் நாம் பார்க்க வேண்டியது நம் குடும்பத்தை, நம் உறவை, நம் கட்சி, இயக்கம், நம் மதம் அல்லது சமுதாயத்தை சார்ந்தோர் என்று அல்லாமல் யாரிடம் இது போன்ற சமூக சீர் கேடுகள் காணப்படினும் எச்சரித்துக் கண்டித்துச் சீர்திருத்த முனைய வேண்டும்.

ஒரு நாள் "பெருநாள்" எல்லாம் கூடும் என்று கண்டு கொள்ளாமல் இருத்தல் கூடாது, மனிதனுடைய 24 மணி நேர வாழ்க்கைக்கும் வழி வகுத்த இஸ்லாமிய மார்க்கம் இதற்கும் ஒரு வரம்பு விதித்துள்ளது, அதனுள் இருந்தே நாம் நமது மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் வெளிபடுத்தக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை மறந்து விடக்கூடாது.

ரமளானில் நாம் பெற்ற இந்த நோன்பும் பயிற்சியும் அதன் பலன்களும் தொடரும் விதமாக இந்த ஷவ்வால் நோன்பு அமைந்திருப்பதை காண முடிகிறது. பெருநாளை மகிழ்வுடன் இஸ்லாமிய வரம்புக்குள் இருந்து அனுமதிக்கப்பட்ட விதத்தில் பெருநாளைக் கொண்டாடிய உடன் பெருநாளுக்கு அடுத்த நாள் முதல் தொடர்ந்து ஷவ்வாலில் ஆறு நாட்கள் அல்லது ஷவ்வால் மாதம் முடியும் முன்னர் இந்த நோன்பு நோற்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவற்றை நாம் நோற்பது மூலம் தொடர்ந்து இன்னும் மற்ற சுன்னத்தான திங்கள், வெள்ளி மற்றும் மாதம் மூன்று நோன்புகள் போன்ற நோன்புகளும் நோற்கும் ஆர்வம் ஏற்படலாம். அதேபோல் தொடர்ந்து குர்ஆன் ஓதுதல், தர்மங்கள் என்று எல்லா நல்ல அமல்களிலும் ஈடுபாடு அதிகரிக்கலாம். அல்லாஹ் நம்மை நன்மைகளின் பால் விரைந்தோடுபவர்களாகவும், தீமைகளை விட்டு வெருண்டோடுபவர்களாகவும் ஆக்கி அருள்புரிவானாக.

ரமளான் மூலம் நாம் பெற்ற "தக்வா" (இறையச்சம்) எனும் அருள் மிகுந்த விலை மதிப்பற்ற பொக்கிஷத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்வோமாக!

அதனை (இறையச்சத்தை) நமது இறுதி மூச்சுவரை பேணிப் பாதுகாத்து ஈமானுடன் நபிவழியில் வாழ்ந்து வரவேண்டும் என்பதனை நன்கு உணர்ந்தவர்களாக மன உறுதியுடன் செயல்பட முனைவோமாக!

வல்ல இறைவன் அதற்கு நமக்கு அருள்புரிவானாக! ஆமீன்.

ஆக்கம்: இப்னு ஹனீஃப்

நோன்புப் பெருநாள் - ஈகைத் திருநாள்!

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 26

நோன்பு பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்கு புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர் புரைதா (ரலி) நூல்கள்:திர்மிதி, தாரகுத்னீ.

நபி(ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகைக்கு செல்லுமுன் ஒற்றைப்படையாக பேரீத்தப்பழத்தை உண்ணுவார்கள். அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, அஹ்மத்.

தொழுகைக்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் வெவ்வேறான வழியை நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்: அபூதாவூத்.

நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளை (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்கு சென்று தொழுவார்கள். அறிவிப்பாளர் அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைகளையும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். (அன்றைய தினம்) முதலில் தொழுகையைத் துவங்குவார்கள். அறிவிப்பாளர்அபூஸயீத் (ரலி) நூல்: புகாரி.

இரு பெருநாள் தொழுகைகளை நபி(ஸல்) அவர்களுடன் பல முறை தொழுதிருக்கிறேன் அவற்றில் பாங்கும் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை. அறிவிப்பாளர் ஜாபிர் பின் சமூரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை தொழுதால் அதற்கு முன்னும் பின்னும் எந்தத் தொழுகையையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி.

நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகையில்) முதல் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 7 தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 5 தக்பீர்களும் கூறுவார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத்.

நபி (ஸல்) ஏழு - ஐந்து என்று பெருநாள் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் தக்பீர் சொல்வார்கள் அதன் முன்னும் பின்னும் எதையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் அம்ரு பின் ஆஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

இரண்டு பெருநாள்களிலும் ஜூம்ஆவிலும் நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா...' என்ற (87வது) அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் 'ஹல் அதாக்க ஹதீஸூல் காஷியா..' என்ற (88வது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள். அறிவிப்பாளர் நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

இரு பெருநாள் தொழுகைகளில் 'காஃப் வல் குர்ஆனில் மஜீத்' என்ற (50வது) அத்தியாயத்தையும் 'இக்தரபதிஸ்ஸாஅத்' என்ற (54வது) அத்தியாயத்தையும் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள். அறிவிப்பாளர் உமர் (ரலி) நூல்: திர்மிதி.

நபி(ஸல்) அவர்களும் அபூபக்கர் - உமர் போன்ற நபித் தோழர்களும் (மக்களுக்கு) பிரச்சாரம் செய்யும் முன்பு பெருநாள் தொழுகைகளைத் தொழுவார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ.

உரை நிகழ்த்துவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்தவாறு அல்லாஹ்வுக்கு அஞ்சுமாறும் அவனுக்கு கட்டுப்படுமாறும் கட்டளையிட்டார்கள். தர்மத்தை வலியுறுத்திப் பேசினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) நூல்முஸ்லிம்.
பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து தக்பீர் கூறுவார்கள். அறிவிப்பாளர் உம்மு அத்தியா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.
புஆஸ் (எனும் போர்) பற்றி அன்ஸாரிகள் இயற்றிய கவிதைகளை இரண்டு சிறுமிகள் பாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அபூபக்கர்(ரலி) அவர்கள் இறைத்தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா... என்று கேட்டார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அபூபக்கரே! அந்தச் சிறுமிகளை விட்டுவிடும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நமக்குரிய பெருநாளாகும் என்றார்கள் இது பெருநாள் தினத்தில் நடந்தது. அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

தப்ஸ் அடித்து பாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பார்த்து அபூபக்கர்(ரலி) அதட்டினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அந்த சிறுமிகள் பாடுவதை விட்டு விடுங்கள். இது பெருநாளைக்குரிய தினமாகும் என்றார்கள். அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

பெருநாள் தர்மம் - பித்ரு ஸகாத்

மீண்டும் ஒரு ரமளான்: 25

பெருநாள் தர்மமும் நோக்கமும்.

"பித்ரு ஸகாத், நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதனால் ஏற்படும் பாவத்தைத் தூய்மைப் படுத்துவதாகவும், ஏழைகளுக்கு உணவுக்கு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது, யார் அதனை தொழுகைக்கு முன்பே கொடுத்து விடுகிறாரோ அதுதான் ஒப்புக் கொள்ளப்பட்டப் பெருநாள் தர்மமாகும் யார் பெருநாள் தொழுகைக்குப்பின் அதனை வழங்குகிறாரோ அது (பெருநாள் தர்மமாகாது மாறாக அது சாதாரண) தர்மமேயாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்- அபூதாவூத், இப்னுமாஜா, தாரகுத்னீ. ஹாகீம்.
"பித்ரு ஸகாத் என்பது நோன்பு வைத்திருக்கும்போது நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும் ஏழைகளின் (அன்றைய) உணவுக்கு வழியாக இருப்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்- அபூதாவூத், இப்னுமாஜா, தாரகுத்னீ, பைஹகீ.
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி ''இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்'' என்றும் கூறினார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்பைஹகீ, தாரகுத்னீ.

பெருநாள் தர்மம் எப்போது, தொழுகைக்கு முன்பா? பின்பா?

பித்ரு ஸகாத்தை பெருநாள் தொழுகைக்கு மக்கள் புறப்படு முன்பே வழங்கிவிட வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவுத், திர்மிதீ.

நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஒருநாள் முன்பாக அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பாக இத்தர்மத்தை வழங்குபவர்களாக இருந்தனர். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்- புகாரி.

பெருநாள் தர்மத்தின் அளவு. 
முஸ்லிமான ஆண்கள் பெண்கள், பெரியவர் சிறியவர், அடிமை சுதந்திரமானவர் ஆகிய அனைவருக்கும் பேரீத்தம்பழம் அல்லது கோதுமை ஆகியவற்றிலிருந்து பெருநாள் தர்மம் தலா ஒரு 'ஸாவு' என்று நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தனர். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவுத், திர்மிதீ, இப்னுமாஜா.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் உணவுப் பொருட்களில் ஒரு ஸாவு பித்ருத் தர்மம் வழங்குவோம் அன்றையதினம் எங்களின் உணவாக கோதுமையும் உலர்ந்த திராட்சையும் இருந்தது. அறிவிப்பாளர் அபூஸயீத் (ரலி) புகாரி.

அனஸ் (ரலி) என்ற நபித்தோழரிடம் ஒருவர் ஸாவு (அளவைப்) பற்றிக் கேட்டபோது இந்த அளவையே கூறினார்கள், கேள்வி கேட்டவர் நீங்கள் அபூ ஹனீஃபா எனும் பெரியாருக்கு மாற்றமாகச் சொல்கிறீர்களே, என்று கேட்டார் இதைக்கேட்ட அனஸ் (ரலி) அவர்கள் கடும் கோபம் கொண்டு பல நபித்தோழர்களிடம் இருந்த 'ஸாவு' என்னும் அளவைக் கொண்டுவரச் செய்து அதை மக்களிடம் காட்டி 'இதில்தான் நாங்கள் அளந்து பெருநாள் தர்மம் செய்வோம்' என்று கூறினார்கள் அவர்கள் காட்டிய 'ஸாவு' என்பது அவர்கள் கூறிய அளவைக் கொண்டதாகவே இருந்தது. (நூல்கள்: தாரகுத்னீ, பைஹகீ)

(இருகைகளையும் சேர்த்து ஒரு பொருளிலிருந்து நான்குமுறை அள்ளி அளந்து போடுவதே ஒரு 'ஸாவு' என்பதன் அளவாகும்)

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கோதுமை - பேரீத்தப்பழங்கள் பெருநாள் தர்மமாக கொடுக்கப்பட்டதால் நாமும் அதையே கொடுக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. இன்றைக்கு நம்முடைய உணவு முறை எதுவாக இருக்கிறதோ அதைத்தான் உணவாக கொடுக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அவர்களின் உணவுப் பொருள்கள் எதுவோ அதுவே பெருநாள் தர்மமாக வழங்கப்பட்டது நாம் மேலே எடுத்துக்காட்டியுள்ள அபூ ஸயீத் (ரலி) அவர்களின் செய்தியிலிருந்து இதை விளங்கலாம்.

இன்றைக்கு நமது உணவு முறையில் அரிசியே பெரும்பங்கு வகிப்பதால் நாம் அரிசியை ஒரு ஸாவு தர்மமாக வழங்கலாம். இதர உணவுப் பொருள்களுக்கும் இதுதான் பொருந்தும். உணவுப் பொருளாக இல்லாமல் பணமாக கொடுக்கலாமா.. என்றால் அவ்வாறு கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என்றே தோன்றுகிறது.

அலட்சியமின்றி அனைவரும் குறித்த நேரத்தில் பெருநாள் தர்மங்களை வழங்கிடுவோம்.

தவறான நடைமுறைகள்

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 24

தவறான கருத்து்கள்:


  • எட்டு ரக்அத்கள், வித்ரு மூன்று ரக்அத்கள் தொழுவதற்குப் பதிலாக 20 ரக்அத்களும் வித்ரு மூன்றும் தொழுவது.


  • ஒவ்வொரு, இரண்டு ரக்அத்களுக்கு இடையே குறிப்பிட்ட சில திக்ருக்களை கூறுவது. தமிழகத்தின் சில ஊர்களில், இவ்வாறு சில திக்ருகளை குறிப்பிட்ட சிலர் பெருங்குரலெடுத்து ஓதுவதும் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்துவதும் நடக்கிறது.


  • இந்த தொழுகையில் முழுக் குர்ஆனையும் ஓதியாக வேண்டும் என்று நம்புவது; அதற்காகநிறுத்தி நிதானமாக ஓதாமல் அவசர அவசரமாக ஓதுவது.


  • சபீனா என்ற பெயரில் ஒரே இரவில் முப்பது ஜுஸ்வையும் ஓதி குர்ஆனுடன் விளையாடுவது.


  • தமாம் செய்தல் என்ற பெயரில் தொழுகையில் இல்லாத வாசகங்களை தொழுகையினூடே சேர்ப்பது.
ரமளான் இரவுகளில் இஷாவுக்குப் பின், ஃபஜ்ருக்கு முன் குறைந்த பட்சம் 7, அதிக பட்சம் 13 ரக்அத்கள் தொழுவது தான் சுன்னத் (நபிவழி) என்று கூறுங்கள். 20 ரக்அத் தொழுவதற்கு ஆதாரப்பூர்வ நபிவழியில் அடிப்படை இல்லை. 
7 முதல் 13 வரை ரக்அத் எண்ணிக்கையையே செயல்படுத்துங்கள்; அவை முடிந்தபின் அவரவர் வீடுகளில் இயன்றவரையில் தொழுங்கள். உபரியான (நஃபிலான) தொழுகைக்கு எண்ணிக்கை நிர்ணயம் செய்யாதீர்கள்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
ஆக்கம்: உம்மு ஸாலிஹா.

இரவுத் தொழுகையின் ரக்அத்கள்

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 23


நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டிய முதல் ஹதீஸின்படி தராவீஹ் அல்லது தஹஜ்ஜுத் தொழுகையின் ரக்அத்துகள் எட்டு மற்றும் வித்ரு மூன்று ரக்அத்கள் என்பது தெளிவாகிறது. வேறு சில ஹதீஸ்களில் இதைவிட அதிக எண்ணிக்கையும் மற்றும் சில ஹதீஸ்களில் இதைவிடக் குறைந்த எண்ணிக்கையும் கூறப்படுகின்றது. அந்த ஹதீஸ்களிலேயே அதற்கான விளக்கமும் கிடைக்கின்றது. ஆனால் நபி(ஸல்) அவர்கள் 20 ரக்அத்துகள் தொழுதார்கள் என்பதற்கோ மற்றவர்களை 20 ரகத்துகள்தொழ ஏவினார்கள் என்பதற்கோ எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸும் இல்லவே இல்லை.
வித்ரு ஒரு ரக்அத் தொழும்போது எட்டு ரக்அத்துகளைப் பத்து ரக்அத்களாகவும் நபி(ஸல்) அவர்கள் தொழுதிருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் இரவில் பத்து ரக்அத்கள் தொழுவார்கள். ஒரு ரக்அத் வித்ரு தொழுவார்கள். பஜ்ரு உடைய சுன்னத் இரு ரக்அத்கள் தொழுவார்கள். ஆக மொத்தம் பதிமூன்று ரக்அத்களாகும்
என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
நபி(ஸல்) அவர்கள் வித்ரு தொழுகையை ஒன்பது ரக்அத்கள் தொழுதால் அத்துடன் போதுமாக்கிக் கொள்வார்கள். தனியாக எட்டு ரக்அத்கள் தொழுவதில்லை. நபி(ஸல்) அவர்கள் ஒன்பது ரக்அத்கள் தொழுவார்கள். அப்போது எட்டு ரக்அத்கள் தவிர அதற்கு முந்தைய ரக்அத்தில் உட்கார மாட்டார்கள். அதன்பின் ஒன்பதாம் ரக்அத்தில் ஸலாம் கொடுத்துவிட்டு உட்கார்ந்த நிலையில் இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள். ஆக மொத்தம் பதினொன்று ரக்அத்துக்களாகும். நபி(ஸல்) அவர்கள் வயோதிகம் அடைந்தபிறகு ஏழு ரக்அத்துகள் தொழுதுவிட்டு பிறகு உட்கார்ந்து இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள். ஆக மொத்தம் ஒன்பது ரக்அத்துகள்
என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கும் இன்னொரு ஹதீஸ் நஸயீயில் இடம் பெற்றுள்ளது. வேறொரு விதமாகவும் அவர்கள் இதே எண்ணிக்கையை தொழுதுள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் எட்டு ரக்அத்துகள் தொழுவார்கள். பின்னர் ஒரு ரக்அத் வித்ரு தொழுவார்கள். முதுமை அடைந்தபோது ஒரு ரக்அத் வித்ரு தொழுவார்கள். பின்னர் உட்கார்ந்து இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்
என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் நஸயீயில் இடம் பெற்றுள்ளது.
மிக அதிகமாக அவர்கள் பன்னிரண்டு ரக்அத்களும் தொழுதிருக்கிறார்கள். அதன் பிறகு வித்ரு தொழுதிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள்பின் இரண்டு ரக்அத்கள்பின் இரண்டு ரக்அத்கள்பின் இரண்டு ரக்அத்கள்பின் இரண்டு ரக்அத்கள்பின் இரண்டு ரக்அத்கள்பின் வித்ரு தொழுவார்கள்(சுருக்கித்தரப்பட்டுள்ளது)
என்று இப்னுஅப்பாஸ் (ரலி) அறிவிக்கக்கூடிய ஹதீஸ் நஸயீஅஹ்மத்இப்னுமாஜா ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது. மற்றோர் அறிவிப்பில் மொத்தம் பதின்மூன்று ரக்அத்கள் (ஃபஜ்ர் சுன்னத் நீங்கலாக) தொழுததாக உள்ளது. இதன் மூலம் பனிரெண்டு ரக்அத்கள் இரவுத் தொழுகை தொழும்போது வித்ரு ஒரு ரக்அத் தொழுதிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
பனிரெண்டு ரக்அத்களை அவர்கள் தொழுத விபரம் விரிவாகவும் இன்னொரு ஹதீஸில் கூறப்படுகிறது.
முதலில் இரண்டு ரக்அத்களை சிறிய அளவில் தொழுவார்கள். பின்னர் நீண்டமிக நீண்ட அளவில் இன்னும் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். அதை விடவும் சிறியதாக இன்னும் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பின்பு இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு ஒரு ரக்அத் வித்ரு தொழுவார்கள்
என்று ஸைத் இப்னு காலித் அல் ஜுஹனீ(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் நஸயீயில் இடம் பெற்றுள்ளது.
வித்ரையும் சேர்த்து நபி(ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்களுக்கு மேல் தொழுததில்லை. குறைந்த பட்சம் வித்ரையும் சேர்த்து ஒன்பது ரக்அத்களுக்கும் குறைவாக இரவில் தொழுததில்லை. இந்த எண்ணிக்கையை விடக் குறைப்பதும்இதைவிடக் கூட்டுவதும் நபி வழிக்கு மாற்றமானதாகும்.
20 ரக்அத்களும்வித்ரு மூன்று ரக்அத்களும் என்று வாதிடுவோர்களுக்கு நபி வழியில் ஒரு ஆதாரமும் இல்லாத போதுஉமர்(ரலி) அவர்களின் பெயரைப் பயன்படுத்தி அவர்கள் 20+3 ரக் அத்கள் தொழுததாகஅல்லது தொழ வைத்ததாக - தொழும்படி ஏவியதாக கதை புனைந்துள்ளனர். உமர்(ரலி) அவர்கள் இருபது ரக்அத்கள் தொழுதார்கள் என்பதற்கோதொழ வைத்தார்கள் என்பதற்கோ ஒரு ஆதாரமும் இல்லை.
உபை இப்னு கஃபு(ரலி)தமீமுத்தாரி (ரலி) ஆகிய இரு நபித் தோழர்களையும் பதினோரு ரக்அத் தொழ வைக்குமாறு உமர்(ரலி) அவர்கள் உத்தரவிட்டதாகத்தான் சான்று உள்ளது. (முஅத்தா) இப்படி உமர்(ரலி) அவர்கள் 11 ரக்அத்கள் தொழ வைக்கக் கட்டளையிட்ட செய்தி தெளிவாக இருக்கும் போதுநபி வழிக்கும் இதுவே பொருத்தமாக அமைந்திருக்கும் போது இதை ஏற்பதே அறிவுடைமையாகும்.
உமர்(ரலி) காலத்தில் மக்கள் 20 ரக்அத்கள் தொழுதார்கள் என்ற கருத்தில் வருகின்ற செய்திகள் யாவும் குறைபாடுடைய செய்திகளாகும். ஆதாரப்பூர்வமான செய்தி என்பதை ஏற்றுக் கொண்டால் கூட அவர்களின் தெளிவான கட்டளை 11 ரக்அத்கள் என்பதைப் பறை சாற்றும் போது அவர்களின் காலத்தில் நடந்ததாகக் கூறப்படுவதை எப்படி ஏற்க இயலும்அவர்களின் மேற்கண்ட கட்டளை இல்லாவிட்டால் வேண்டுமானால் அவர்களின் காலத்தில் நடந்ததை அவர்கள் நடத்தியதாக நம்ப இடமிருக்கும். அவர்களின் கட்டளைஅவர்களின் காலத்தில் நடந்ததாகக் கூறப்படுவதற்கு மாற்றமாக இருக்கும்போது எப்படி உமர்(ரலி) அவர்களுடன் இதை சம்பந்தப் படுத்த முடியும்?
- தொடரும், இன்ஷா அல்லாஹ்.
ஆக்கம்: உம்மு ஸாலிஹா.

இரவுத் தொழுகையின் நேரம்

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 22

இந்தத் தஹஜ்ஜுத் தொழுகையின் நேரம் இஷா முதல் ஃபஜர் வரையிலும் ஆகும். இரவின் கடைசி நேரத்தில் தான் தொழ வேண்டும் என்று கட்டாயம் ஒன்றும் இல்லை.எனினும் இரவுத் தொழுகையைப் பொறுத்தவரை தூங்கி எழுந்து தொழுவதேசிறப்பானதாகும்இரவில் தூங்கி தொழுகைக்கு எழுவதில் பல சிறப்புக்களும்பயன்களும் உள்ளனதிருக்குர்ஆனில் இறைவன்,
நிச்சயமாக இரவில் (தொழுகைக்காகஎழுவது மனமும்நாவும் இணைந்திருக்கமிக்க ஏற்றதும் கூற்றால் மிக்க உறுதியானதுமாகும்(அல் குர்ஆ ன் 73:6)
என்று கூறுகிறான்ஏற்றுக் கொள்ளப்படும் தொழுகைக்கு மனம் ஒருநிலையில் இறைவனை நினைத்திருப்பதுஅவசியமானதாகும்இரவில் தூங்கி எழுந்து தொழுபவருக்கு இது சாத்தியமாகின்றதுமேலும்,
இரவின் மூன்றாம் பகுதியில் ஏழாம் வானத்திலிருந்து பூமியின் (முதல்) வானத்திற்கு இறங்கி வந்து, "என்னிடம் கேட்பவர் யார்கேட்பவருக்கு கொடுக்க நான் காத்திருக்கிறேன்" என இறைவன் கூறுவதாகநபிகள் நாயகம் (ஸல்அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.
இதிலிருந்து தூங்கி எழுந்து இரவின் பிற்பகுதியில் தொழுவதின் சிறப்பை மேற்கண்ட குர்ஆன்-ஹதீஸ் சான்றுகளில் இருந்தே இதனை நாம் அறிந்து கொள்ள இயலும்.
தனியாகவும் தொழலாம், ஜமாஅத் ஆகவும் தொழலாம்:
நபி (ஸல்) அவர்கள் மூன்று நாட்கள் இந்தத் தஹஜ்ஜுத் தொழுகையை ஒரு ரமளானில் ஜமாஅத்துடன் தொழுதுள்ளனர். இதனால் மூன்று நாட்கள் மட்டுமே ஜமா அத்தாக தொழ வேண்டும் என்று கருதி விடமுடியாது. ஏனெனில்மூன்று நாட்களுக்குப் பின் ஜமாஅத்தை அவர்கள் விட்டு விட்டதன் காரணத்தை அவர்களே தெளிவாக்கியுள்ளார்கள்.
மூன்று நாள் ஜமாஅத்தாக நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் இத்தொழுகையை தொழ வைத்ததைக் கேள்விப்பட்டமதீனாவில் இருந்த முஸ்லிம்கள் அனைவரும் நான்காம் நாள் மஸ்ஜிதுந்நபவியில் பெருமளவில் கூடிவிட்டனர்.ஆனால் ஃபஜ்ருத் தொழுகை நேரம்வரை நபி (ஸல்அவர்கள் தொழ வைக்க வரவில்லைபின்னர் ஃபஜ்ருத் தொழுகைமுடிந்தபின் நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் கூடியிருந்தவர்களை நோக்கி"இத்தொழுகை கடமையாகக் கருதப்பட்டுவிடுமோ என்று அஞ்சியே நான்காம் நாள் ஜமாஅத் தொழுகை நடத்த நான் வரவில்லை" என்றுகூறினார்கள். எனினும் இத்தொழுகையை ஜமாஅத்துடன் தொழ எந்தத் தடையும் இல்லை.
நபி (ஸல்) அவர்களது காலத்திற்குப் பின் மார்க்கத்தில் எதுவுமே கடமையாக முடியாது என்பதால் எல்லா நாட்களும் ஜமாஅத்தாக தொழலாம். எனவே தஹஜ்ஜுத் தொழுகையை ஜமாஅத்தாக தொழுவது நபி வழிக்கு மாற்றமானதன்று. ஆனால் இங்கு ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்தற்காலத்தில் மக்கள்கடமையான தொழுகைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட அதிக முக்கியத்துவத்தை ரமளான் இரவுநேரத்தில் பள்ளியில் நடைபெறும் ஜமாஅத் தொழுகைக்கு கொடுக்கின்றனர்கடமையான தொழுகைக்குப் பள்ளிக்குவருவதில் அசட்டையாக இருந்தாலும் இத்தொழுகைகளை தவறவிடாமல் மிக்க சிரத்தையுடன் தொழுவதற்குப்பள்ளிக்கு விரைகின்றனர்.
இத்தகைய மனோபாவம் மாற்றப்பட வேண்டியதாகும்கடமையான தொழுகையில் அசட்டையாக இருந்து கொண்டுமற்ற எந்த அமல்கள் செய்தாலும் அவை அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதற்கு எந்த நிச்சயமும்இல்லை.
பல நபி மொழிகள் மற்றும் செய்திகளிலிருந்து நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இதனைத் தனியாகவும்,ஜமாஅத்தாகவும் தொழுதுள்ளனர். ஜமாஅத்தை இதற்கு வலியுறுத்தவில்லை என்பதால் ஜமாஅத்தாகதொழக்கூடாது என்று பொருள் கொள்ளாமல், ஜமாஅத்தாகவும் தொழலாம்தனியாகவும் தொழலாம் என்று பொருள் கொள்ள வேண்டும்.
- தொடரும், இன்ஷா அல்லாஹ்.
ஆக்கம்: உம்மு ஸாலிஹா.

ரமளான் இரவுத் தொழுகை

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 21


நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானில் நோன்பு நோற்றோம். ரமளானில் ஏழு நாட்கள் மீதமிருக்கும் வரை நபி (ஸல்) எங்களுக்குத் தொழுகை நடத்த வில்லை. இருபத்தி மூன்றாம் நாள், இரவின் மூன்றில் ஒரு பகுதி நேரம் வரை எங்களுக்குத் தொழ வைத்தார்கள். அதன்பிறகு (சில நாட்கள்) தொழ வைக்கவில்லை. ரமளானில் மூன்று நாட்கள் எஞ்சியிருக்கும் போது மீண்டும் எங்களுக்குத் தொழ வைத்தார்கள். தம் குடும்பத்தினரையும், மனைவியரையும் அதில் பங்கெடுக்கச் செய்தார்கள். ஸஹர் நேரம் முடிந்துவிடுமோ என்று நாங்கள் அஞ்சும் அளவுக்கு நீண்ட நேரம் தொழ வைத்தார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்கள்: நஸயீ, இப்னுமாஜா).
ஸஹர் நேரம் தவறிவிடுமோ என்று அஞ்சும் அளவுக்கு அவர்கள் தொழுகை நடத்தியுள்ளார்கள், இஷா முதல் ஸஹர் வரை நபியவர்கள் ஒரேயொரு தொழுகையை தொழுதிருக்கிறார்கள் என்றால் அது தஹஜ்ஜுத் தொழுகைதான் என்பதற்கு வேறெந்தச் சான்றும் தேவையில்லை. ஏனெனில் நம்மைப் பொருத்தவரை சுன்னத்தான தஹஜ்ஜுத் தொழுகை என்பது நபிகள் நாயகம் அவர்கள் தவறாமல் (ரமளான் அல்லாத காலங்களிலும்) நிறைவேற்றி வந்த ஒரு தொழுகையாகும். இந்தத் தொழுகையை விடுத்து நபி(ஸல்) அவர்கள் மற்றொரு சிறப்பான தொழுகையை தொழுது கொண்டிருந்தார்கள் என எவரும் கூற முன் வரமாட்டார்கள்.  இதிலிருந்து ரமளானுக்கென்று தனியாக ஒரு தொழுகையை அவர்கள் தொழவில்லை என்பதை இது தெளிவாக விளக்குகிறது.
உமர்(ரலி) அவர்களுடன் நாங்கள் ஓர் இரவு ரமளானில் பள்ளிவாசலுக்குச் சென்றோம். மக்கள் பல்வேறு குழுக்களாக இருந்தனர். சிலர் தனியாகவும், வேறு சிலர் கூட்டாகவும் தொழுது கொண்டிருந்தனர். உமர்(ரலி) அவர்கள் "இவர்களை ஒரே இமாமின் பின்னே தொழுமாறு நான் ஏற்பாடு செய்வது நல்லது" என்று எண்ணி அவ்வாறு செயல்படுத்தினர். உபை பின் கஃபு (ரலி) அவர்களை இமாமாக ஏற்பாடு செய்தார்கள். பின்பு மற்றோரு இரவு பள்ளிக்கு வந்து மக்கள் ஒரே இமாமைப் பின்பற்றித் தொழுவதைக் கண்டார்கள். "இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது. இப்போது தொழுதுவிட்டுப் பிறகு உறங்குவதைவிட உறங்கிவிட்டு இரவின் இறுதியில் தொழுவது மிகவும் சிறந்ததாகும்" என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான், நூல்: புகாரி ).
உமர்(ரலி) அவர்களின் இந்தக் கூற்றும் ரமளானுக்கு என்று விஷேசத் தொழுகை எதுவும் கிடையாது என்பதை அறிவிக்கிறது. "இப்போது தொழுதுவிட்டு உறங்குவதைவிட, உறங்கிவிட்டு இரவின் இறுதியில் தொழுவது சிறந்தது" என்ற அவர்களின் கூற்றிலிருந்து இத்தொழுகை இரவின் இறுதிப்பகுதியில் நபிகள் நாயகம் தொழுது வந்த தஹஜ்ஜுத் தொழுகை என்பதனையும் விளங்கலாம். "இரவின் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே தொழுகைதான். ஆரம்ப நேரம் ஒரு தொழுகை, இறுதி நேரம் ஒரு தொழுகை" என்று இரண்டு தொழுகைகள் கிடையாது என்பதும் இதிலிருந்து தெளிவாகின்றது.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அன்றாடம் இரவு தொழுதுவரும் தஹஜ்ஜுத் தொழுகைதான் ரமளானிலும் உள்ளது. ரமளானுக்கென்று தனித் தொழுகை எதுவும் கிடையாது என்பது இதன் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகிறது.
மேற்கண்ட ஹதீஸில் உமர்(ரலி) அவர்கள் உபைத் பின் கஃப் (ரலி) அவர்களை இமாமாக நியமித்ததாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பாக மற்றொரு ஹதீஸில்,
உபைத் பின் கஃப் (ரலி) அவர்களையும் தமீமுத் தாரி (ரலி) அவர்களையும் மக்களுக்கு 11 ரக் அத்துகள் தொழ வைக்குமாறு உமர்(ரலி) அவர்கள் கட்டளை இட்டார்கள். (ஆதாரம்: முஅத்தா).
உமர் (ரலி) அவர்கள் 11 ரக் அத்கள் தொழ வைக்குமாறு இமாமை நியமனம் செய்தது 20 ரக்அத் கொண்ட தராவீஹ் என்ற தனித்தொழுகை கிடையாது என்பதைத் தெளிவாக்குகிறது.
அப்படி என்றால் ரமளானுக்குரிய சிறப்பு என்ன என்ற கேள்வி எழலாம். எல்லா நாட்களிலும் இந்தத் தொழுகையைத் தொழவேண்டும் என்றாலும் ரமளானில் இந்தத் தொழுகைக்கு அதிக அளவு ஆர்வமூட்டப்பட்டுள்ளது. "யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்நோக்கியும் நின்று வணங்குகிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன" என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன.
இது போன்ற ஹதீஸ்கள் யாவும் ரமளானில் நின்று வணங்குவதில் ஆர்வமூட்டுகின்றன. நபி (ஸல்) அவர்கள் பதினோரு ரக் அத்துகளைக் கொண்டு சில வேளைகளில் இரவு முழுவதும் நின்று வணங்கியுள்ளதால் அவ்வாறு வணங்குவதையே அது குறிக்கும். நபி (ஸல்) அவர்கள் 11 ரக் அத்துகளே நின்று வணங்கியுள்ளதால் அதையே நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
- தொடரும், இன்ஷா அல்லாஹ்.
ஆக்கம்: உம்மு ஸாலிஹா.

லைலத்துல் கத்ர்

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 20


ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாளாகிய லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் அறிவோம். எனினும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து அதை நாம் பெற வேண்டும் எனும் ஆவலில் நாம் செயல்பட வேண்டும். அல்லாஹ் இதைப்பற்றி குர் ஆனில் கூறுவதையும் முறையாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் லைலத்துல் கத்ர் எனும் ஓர் இரவின் நன்மையைப்பற்றி குறிப்பிடும்போது, "அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது" என்று கூறுகின்றான். பார்க்க (97 :3)
அதாவது அந்த ஓர் இரவின் நன்மை ஆயிரம் மாதத்தின் நன்மைகளுக்குச் சமம் என்று குறிப்பிடுகின்றான். ஆயிரம் மாதங்கள் என்பது சுமார் 83 வருடங்களும் நான்கு மாதங்களும் ஆகும். அதாவது ஒரு நாளின் நன்மை சராசரி மனித ஆயுளையும் விட அதிகமான ஆண்டுகளின் நன்மையை அளிக்க வல்லது என்பதைச் சிந்திக்க வேண்டும். நமது வாழ்க்கையில் ஒரு 10 லைலத்துல் கத்ரு இரவின் நன்மைகள் முழுமையாக நாம் பெற்றால் கூட அது 833 வருடங்களுக்கு நிகரான நன்மைகளை நமக்குப் பெற்றுத்தரும். 20 ஆண்டுகளின் லைலத்துல் கத்ரினை பெற்றால் 1666 வருடங்கள் என்று முந்தைய சமுதாயத்தினரின் ஆயுளின் அளவிற்கு நன்மைகளினைப் பெற்று தரவல்லது என்பதை நினைத்துப் பார்க்கும் போதே நமக்கு அல்லாஹ்வின் இந்த மகத்தான வெகுமதியினைத் தவற விடக்கூடாது எனும் எண்ணம் வரும்.
நமது வாழ்க்கையில் நாம் சந்தித்த கடந்த ரமலான்களில் லைலத்துல் கத்ரின் நன்மையை நாம் பெற்றுள்ளோமா என்பதை அல்லாஹ்வே நன்கறிவான். ஆயினும் அதைப் பெற நாம் நாடியுள்ளோமா? அதற்காக முறையாக நபி(ஸல்) வழியில் முயன்றுள்ளோமா? அதைப் பெறக்கூடிய பாக்கியம் வேண்டி அல்லாஹ்விடம் பிராத்தித்துள்ளோமா? என்பதை நாம் நம்மையே கேட்டு பதில் பெற வேண்டும். இதற்கு இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிராத்திப்பதுடன் அதை நபி(ஸல்) அவர்கள் வழியில் முயல வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் 'இஃதிகாப்' இருந்தார்கள் என்று நபி வழியில் காண முடிகிறது.
அபூ ஸஈத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு நடுப் பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப் பெறுவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில் வானவர் தோன்றி, அந்த இரவு கடைசிப்பத்து நாளில் உள்ளது என்று அறிவித்தார். உங்களில் யார் இந்தக் கடைசி நாட்களில் இஃதிகாஃப் இருக்க விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப் இருக்கட்டும். (முஸ்லிம்)
ஆகையால் கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடிக் கொள்ளுமாறு கூறினார்கள், மேலும் அதன் இரவுகளை வணக்கங்கள் மூலம் சிறப்பிப்பார்கள்; தங்கள் குடும்பத்தினர்களையும் ஏவுவார்கள் என்றும் ஹதீஸ்கள் கூறுகின்றன.
நபி(ஸல்) அவர்கள் தாமும் தமது குடும்பத்தினரும் விழித்திருந்து லைலத்துல் கத்ரு இரவைப் பெற வணக்கங்களில் ஈடுபட்டதைப் போல், நாம் முயல வேண்டும். இயன்றால் அவர்கள் கடைசிப் பத்து நாட்கள் பள்ளியில் 'இஃதிகாப்' இருந்ததைப் போல் இஃதிகாப் இருக்க வேண்டும். நமது வாழ்நாளில் நேரம் கிடைக்கும் போது ரமலானில் குறைந்தது ஒரு முறையேனும் நபிவழியான (ஸுன்னத்தான) இந்த 'இஃதிகாப்' இருக்க வேண்டும் என்று உள்ளத்தினால் நாட்டம் கொள்ளவேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவர் துர்பாக்கியசாலிகளோ அவர்களைத் தவிர அனைவரும் லைலத்துல் கத்ரைப் பெற்றுக்கொள்வார்கள்.
நாம் அதைப் பெற்ற பாக்கியசாலிகளா துர்பாக்கியசாலிகளா என்பது நாமறியோம். அல்லாஹ்வே நன்கறிவான். ஆனால் பரவலாக இதை மறந்தவர்களாக முஸ்லிம்கள் பலர் வாழும் நிலையும் குறிப்பாகக் கடைசிப் பத்து நாட்களில் நமது பொன்னான நேரத்தை இவற்றைவிடவும் அதிகமாக இதர அலுவல்கள் பெருநாளின் தேவைகள் துணிமணிகள், காலணிகள், அணிகலன்கள், வாசனை திரவங்கள்,போன்ற இதர பொருட்களை வாங்கும் நிமித்தம் கடைவீதிகளில் கழிந்து விடுவதும் மாலையில் வெளியேறி இரவில் தாமதமாக அசதியுடன் வீடு திரும்பி இரவு தொழுகைகள் பஜ்ரு தொழுகை ஸஹ்ர் (உட்பட) லைலத்துல் கத்ர் எனும் மகத்தான இரவு போன்ற அனைத்தும் தவறிவிடும் நிலையையும் காண முடிகிறது. அவையெல்லாம் லைலத்துல் கத்ரு என்னும் இந்தப் பொன்னான வாய்ப்பை இழக்க வைக்க முஸ்லிம்களுக்கு எதிரான ஷைத்தானின் முயற்சி என்றால் அது மிகையாகாது. இம்முயற்சியை முறியடிக்கும் விதமாக நமது தேவைகளை கடைசிப் பத்து நாட்களுக்கு முன்னரே அல்லது இரவுக்கு முன்பே தாமதமின்றி வாங்கி நேர விரயமின்றி, கடைசிப் பத்து இரவுகளில் அதிகமான வணக்கங்கள், நல்ல அமல்கள் புரிந்து கண்ணிய மிக்க இந்த லைலத்துல் கத்ரை பெற முயல வேண்டும்.
இதர எத்தனையோ விஷயங்களுக்கு கண் விழித்து இருக்கும் நாம் இந்த மகத்தான கடைசிப் பத்து இரவுகளிலும் நரகமீட்சி பெரும் விதத்தில் துவா செய்யவும் லைலத்துல் கத்ர் இரவினை முறையாகப் பெற்றிடவும் முனைந்திட வேண்டும். ஆனால் சிலர் இந்த லைலத்துல் கத்ர் எனும் கண்ணியமிகு இரவு ஒரே ஒரு இரவில் இருப்பதாக அதுவும் ரமலானின் 27ம் நாளில் இருப்பதாகத் தவறாக நம்பி, அந்த ஓரிரவை மட்டும் விசேஷமாக சிறப்பிக்கும் அமல்களில் ஈடுபடுவதையும் காண முடிகிறது.
நபி(ஸல்) அவர்கள் இப்படி ரமலான் 27 எனும் ஒரே இரவை சிறப்பிக்குமாறு கூறாததாலும் அவர்கள் வாழ்க்கையில் இது 21,23,25,27,29 போன்ற வெவ்வேறு ஒற்றைப்படை இரவுகளில் வந்துள்ளதாக அறிவித்துள்ளதாலும் 27ஆம் இரவை மட்டுமே சிறப்பிப்பது நபி வழிக்கு மாற்றமானது என்பதை நமது மறுமைக்காக கவனத்தில் கொள்ள வேண்டும். நமது அமல்களை நபிவழியில் மாற்றிக்கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் மற்ற மாதங்களில் வணக்க வழிபாடு விஷயத்தில் ஆர்வம்காட்டாத அளவு ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் அதிக அளவில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம்.
ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடத் தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.
லைலத்துல் கத்ரில் அதிக அளவு பிரார்த்தனை புரிய நபி(ஸல்அவர்கள் ஒரு துவாவை கற்றுதந்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன். மன்னிப்பையே விரும்புபவன். எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!)
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹமத்.
இத்தகைய புனிதமிக்க ரமளானின் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதிக உபரியான வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வல்ல இறைவனின் அருளை அடைவோமாக!
அல்லாஹ் நமக்குப் புனித ரமலானின் சிறப்புமிகு நாட்களின் அமல்களை முறையாக நிறைவேற்ற உதவிடவும் நமது பிராத்தனைகளை ஏற்று அருள் புரிந்திடவும் நமக்கு பாவமன்னிப்பளித்திடவும் நம் அனைவரையும் நரகில் இருந்து பாதுகாத்திடவும் புனித ரமலானின் அனைத்து நன்மைகளையும் முழுமையாக பெற்றிடும் விதத்தில் அல்லாஹ்வின் ஏற்பிற்குரியதாக நமது அமல்கள் அமைந்திடவும் அதன் மூலம் நமது இம்மை மறுமை வாழ்க்கை வெற்றி பெற்றிடவும் இந்த புனித ரமலான் முதல் என்றென்றும் பிராத்திப்போமாக.
- தொடரும் இன்ஷா அல்லாஹ்

ஆக்கம்: இப்னு ஹனீஃப்

;;