உண்ணுவதற்கும்,உடுப்பதற்கும், உறங்குவதற்கும், உழைப்பதற்கும் உரிமை உண்டாக்கி, உலகில் உள்ள உயிரினங்களுக்கெல்லாம் உயிர் ஊதிய உரிமையாளன் உயர்ந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
இயற்கை மார்க்கமான இனிய இஸ்லாத்தை இம்மையில் இன்றுவரைக்கும் இயங்கவைத்த இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
முஃமினாகப் பிறந்த ஒவ்வொருவர்மீதும் அல்லாஹ்வுடைய மார்க்கமான இஸ்லாத்தைப் படிப்பது கட்டாயக் கடமையாகும். படித்ததுடன் மாத்திரம் நின்றுவிடாமல் படித்தவற்றை நமது வாழ்க்கையில் எடுத்து நடந்து பிறருக்கும் இஸ்லாம் மார்க்கத்தை எடுத்துச் சொல்லி நேரான பாதையில் மக்களை எடுக்கவேண்டியது நம்மீது கடமையாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘என்னிடமிருந்து ஒரேயொரு செய்தி கிடைத்தாலும் சரி அதைப்பிறருக்கு எடுத்துச்சொல்லுங்கள்’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் நூல்: புகாரி-3461)
ஆனால் மார்க்கம் என்ற பெயரில் மார்க்கத்தில் இல்லாததையும் கூறிவிடக்கூடாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவனாவது உண்டாக்கினால் அது நிராகரிக்கப்படும்.’ (புகாரி:2697)
அல்லாஹ்வுடைய ஓரிறைக் கொள்கையை எடுத்துச் சொல்வதற்காக நமக்கு முன் வாழ்ந்து மரணித்த நபிமார்கள், ஸஹாபாக்கள், இமாம்கள், நல்லடியார்கள் ஆகியோர் அவர்களின் ஊடகங்களாக மனிதர்கள், பறவைகள், ஜின்கள், கடிதங்கள், பத்திரகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றை பயன்படுத்தி அவர்களுடைய காலத்திற்கேற்றவாறு ஒவ்வொருவரும் பலவிதமாக இஸ்லாத்தை எடுத்துச்சொன்னார்கள். அதுபோல் வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களையும் பயன்படுத்தி இன்றைய காலத்தில் இஸ்லாத்தை எடுத்துச் சொல்கின்றோம். இன்று 21ம் நூற்றாண்டில் மிகப்பெரியதொரு ஊடகமாக இணையதளம் காணப்படுகின்றது.
இஸ்லாத்தை மக்களுக்கு எத்திவைப்பதற்காக இன்றைய காலத்தில் இணையதளத்தை மிகப்பெரிய ஒரு ஊடகமாக அதிகமானோர் பயன்படுத்துகின்றார்கள். மக்களிடத்தில் இணையதளம் குறுக்கு வழியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எந்தளவுக்கென்றால் யூத, கிறிஸ்தவர்கள் இந்த ஊடகத்தைப் பயன்படுத்தி இஸ்லாம் என்ற பெயரில் பல இணையமுகவரிகளை உருவாக்கி இஸ்லாத்தில் இல்லாதவற்றை இருப்பதாகக்கூறி முஸ்லிம்களை திசை திருப்பிக்கொண்டிருக்கின்றார்கள். அதுபோன்று இளைஞர்களிடத்தில் இணையதளம் தவறான பாதையில் பயன்படுத்தப்படுகின்றது. இன்னும் இதுபோன்ற பலதவறான முறையில் மக்களிடத்தில் இணையதளம் பயன்படுத்தப்படுகின்றது கவலைக்குறிய செய்தியாகும். இணையதளம் என்றால் அது மக்களை வழிகெடுக்கின்ற ஒன்று, அதன்பக்கம் எவரும் செல்லக்கூடாது என்று மக்களிடத்தில் கீழ்த்தரமாகத்தான் பார்க்கப்படுகின்றது.
ஆனால் இணையதளம் ஊடாக மக்களின் இஸ்லாமிய அறிவை மிக இலேசாக வளர்த்துக்கொள்வதற்கும், அதிகமாக பணம் கொடுத்து வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கக்கூடிய கல்விகளை வீட்டிலிருந்துகொண்டே படிப்பதற்கும் பல வசதிகள் இருக்கின்றன. உண்மையிலேயே இணையதளத்தில் வழிகேடு 10 வீதமென்றால் நேரான வழி 90 வீதமாக இருக்கின்றது.
ஆகவே, மக்கள் வழிகேட்டிலிருந்து தவிர்ந்து நேரான வழியில் வாழவேண்டும் என்ற ஒரேயொரு நோக்கமே இந்த இணையதளம் ஆரம்பிப்பதற்கு காரணியாக அமைந்தது. நாம் எல்லோரும் இஸ்லாத்தைப் படித்துணர்ந்து அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர்களாக வாழ அல்லாஹ் உதிவுபுரிவானாக!
அல்லாஹ் அறிந்தவன்.
அன்புச் சகோதரன்
நிக்றாஸ் பின் சுல்தான்

0 comments: